Home » Ghost voters » இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் தேர்தல் மோசடியாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கும்.

ZL மொஹம்மட்                       தமிழாக்கம்: ந. அசோகன்.
இலங்கையின் 2015 ஜனாதிபதி தேர்தலில் உபயோகிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 15,044,490 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவின்படி சட்டபூர்வமாக வாக்களிக்கக்கூடிய வயதுள்ள பிரஜைகளின் எண்ணிக்கை  14,449,000 மட்டுமே. இந்த மேலதிகமான வாக்காளர் தொகை முழு வாக்காளர் பட்டியலின் தொகையின்  4.3 சதவீதமாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் 3.7% பெரும்பான்மையால் முடிவு செய்யப்பட்டது என்பதையும் அதற்கு முந்தைய தேர்தல்களின் பெரும்பான்மைகள் இதன் பாதியளவு என்பதையும் நோக்கும் போது இந்த முரண்பாட்டால் விளையக்கூடிய ஆபத்து தெளிவாகும்.  2015 தேர்தல் முடிந்த கையோடு கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ (கொழும்பு டெலிகிராப், 15  ஜனவரி  2015) இந்த   “மர்ம-வாக்காளர்கள்” விடயத்தைச் சுட்டிக்காட்டினார். கலாநிதி பெர்னாண்டோ 1970-களிலிருந்தே இலங்கைத் தேர்தல்களை ஆழமாக ஆராய்ந்து வருபவர். சட்டபூர்வமாக வாக்களிக்கும் வயதுள்ள குடிமக்களின் தொகையைவிட இலங்கை வாக்காளர் பட்டியலில் குறைந்தது 782,460 மேலதிக பெயர்கள் இருந்தன என்ற கூற்றை அவர் முன்வைத்தார். நான்கு மாதங்கள் கடந்த பின்னரும், யாரும் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த மர்ம வாக்காளர்களின் தொகை 10-25 தேர்தல் தொகுதிகளின் பெறுபேறுகளை மாற்றிவிடக் கூடிய சாத்தியம் இருப்பதை இந்தக் கட்டுரையில் எடுத்துக் காட்டுவோம்.

Maithiripala sirisena and Mahinda Rajapakse votes percentage difference

நிலப் படங்களின் தலைப்புகள்: இடப்பக்க நிலப்படம்– வயதின்படி வாக்களிக்கும் உரிமையுள்ளவர்களின் (பதினெட்டரை வயதுக்கு மேலானவர்கள்) எண்ணிக்கையைவிட மேலதிக வாக்காளர்கள் உள்ள மாவட்டங்கள் பலவேறு சிவப்பு நிறங்களால் காட்டப்படுள்ளன. அதேபோல குறைவான வாக்காளர்கள் உள்ள மாவட்டங்கள் நீல நிறங்களால் காட்டபட்டுள்ளன. கொழும்பில் (126,000) அதிகமான பற்றாக்குறை. குருநாகலில் (115,000) ஆகக்கூடிய மேலதிகம். நடுவிலுள்ள நிலப்படம் தேர்தலில் வாக்களித்தவர்களின் தொகை, வாக்களிக்கும் உரிமையுள்ளவர்களின் தொகையின் சதவீதமாகக் காட்டப்பட்டுள்ளது. மாவட்டங்களின் நிறங்கள் மழுநிறத்திலிருந்து (வவுனியா 69%) கடுஞ்சிவப்பு (அம்பாந்தோட்டை94%) வரை வேறுபடுவன. வலப்பக்க நிலப்படம்: மாவட்டங்களின் நிறங்கள் ராஜபக்சவுக்கும் சிறிசேனவுக்கும் இடையிலான சதவீத வாக்கு வித்தியாசத்தைக் காட்டுவன. ராஜபக்சவின் பெரும்பான்மை சிவப்பு நிறங்களிலும் சிறிசேனவின் பெரும்பான்மை நீல நிறங்களிலும் காட்டப்படுள்ளன. 7%-இலும் குறைவான பெரும்பான்மைகள் நிறப்படுத்தப்படவில்லை.

வாக்காளர் பதிவின் தாமதங்கள்

உண்மையான மேலதிக வாக்காளர் தொகை 4.3%-இலும் அதிகம் ஏனென்றால் ஒருவர் பதினெட்டு வயதைத் தாண்டினாலும் கிராம சேவையாளரிடமிருந்து தேர்தல் பதிவுப் பத்திரங்களைப் பெற்ற பிறகுதான் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்ய விண்ணப்பிக்கலாம். கிராம சேவையாளர்கள் இந்தப் பத்திரங்களை வருடத்துக்கு ஒருமுறைதான் விநியோகம் செய்வார்கள். ஆகவே விண்ணப்பத்தை ஆரம்பிக்க சராசரியாக ஆறு மாதங்கள் வரை எடுக்கலாம். சட்டபூர்வமான வாக்களிக்கும் வயதை வைத்துக் கணிக்கப்பட்ட  மேலதிக வாக்காளர் தொகை 595,000. பதினெட்டரை வயதை யதார்த்தமான வாக்களிக்கும் வயது என்று எடுத்துக் கொண்டால் இந்த மேலதிகம் 762,000க்கு ஏறும். பத்தொன்பது  வயதென்று கருதினால் மேலதிகம் 931,000 ஆகும்.

வாக்காளர் பட்டியலில் பதியப்படாத பிரசைகள்

பதினெட்டரை அல்லது பத்தொன்பது வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் கருத்தில் கொண்டு கணிக்கப்படும் மேலதிகம் கூட ஒரு குறைவான மதிப்பீடு தான். நாடு பெயர்ந்தவர்கள், பிறநாடுகளில் தொழில் செய்துகொண்டோ படித்துகொண்டோ இருப்பவர்கள், பிறநாடுகளில் அடைக்கலம் கோரிய அகதிகள், கவலையீனத்தாலோ அல்லது நிர்வாகக் கோளாறுகளாலோ வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்ய விண்ணப்பிக்காதவர்கள் போன்றோரை எல்லாம் கணக்கில் கொண்டால் வாக்காளர் பட்டியலில் இல்லாத ஆனால் வாக்களிக்கும் உரிமையுள்ள பிரசைகளின் தொகை கணிசமானது. 2000க்கும் 2013க்குமிடையில் தொழில் காரணமாகப் பிறநாடு சென்றவர்கள் 1,232,000 என்றும் அகதிகளாக நாடு பெயர்ந்தவர்கள் 122,000 என்றும் மதிப்பிடப் பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரசாங்க நிறுவனங்களால் செய்ப்பட்ட இந்த மதிப்பீடுகள் குறைவானவை ஏனென்றால் பலர் எந்தவித உத்தியோகபூர்வச் சுவடுகளையும் விடாமலே நாடு பெயர்கிறார்கள். அண்மையில் வெளிநாடுகளில் வதியும் பிரசைகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிய சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. தற்காலிகமாகத்தான் ஒருவர் வெளிநாடு சென்றார் என்று உறுதியளிக்கக் சாட்சிகள் இருந்தாலும்கூட இப்படிப்பட்ட நீக்கல்களை தடுத்துநிறுத்த முடியாமல் போகலாம். மலையகத்திலிருந்து பிறநாடு சென்ற என் நண்பரொருவரின் உறவினர்களிடம் கடவுச்சீட்டு மற்றும் பிறநாட்டு முகவரி விவரங்களைத் தந்தாலன்றி அவர் வாக்காளர் பட்டியலிலிருந்து விலக்கப்படுவார் என்று கிராமசேவையாளர் அறிவித்திருக்கிறார். வெளிநாட்டில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகள் வயது வந்தததும் நேர்முகமாகக் கிராம சேவையாளரைச் சந்திக்க வந்தாலன்றி வாக்காளர் பட்டியலுக்கு அனுமதிக்கப்படார். வாக்காளர் விண்ணப்பப் பத்திரங்கள் மே மாதக் கடைசியில் விநியோகிக்கப்பட ஆரம்பித்தன. ஆகவே இதுபற்றிய பிறரின் அனுபவங்களைப் பற்றியும் விரைவில் கேள்விப்படுவோம் என நம்புகிறேன்.

எனது உறவினரின் அனுபவம் இது: கடந்த பத்து வருடங்களில் வாக்களிக்கும் வயதையடைந்த ஐந்துபேரில் மூவர் மட்டும்தான் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டனர். அவர்களிலும் இருவர் பிறகு காரணமேதுமின்றி நீக்கப்பட்டனர். மிஞ்சியிருந்த இருவரையும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கிராமசேவையாளரைத் தொடர்பு கொண்டு பதிவுசெய்விக்க முயன்றேன். ஆனால் உதவி அரச பணிப்பாளரின் அலுவகம் பதிவு செய்யப்படுவதற்கான சாத்தியமேயில்லை என்று அறிவித்தது. வருடாவருடம் நாங்கள் தவறாமல் பத்திரங்களைப் பூர்த்தி செய்தோம் – ஆனால் வருடாவருடம் வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கான நிவர்த்தி என்னவாயிருக்கலாம் என்றும் தெரியவில்லை.

ஆகவே குறைவான மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு கணித்தாலும், அதாவது பதினெட்டரை வயதுக்கு மேற்ப்பட்டவர்களை மட்டும் கருதி தகமையிருந்தும் பதியப்படாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைவாக மதிப்பிட்டும் பார்க்க, கிட்டத்தட்ட 1-1.5 மில்லியன் (10 – 15 லட்சம்) மர்ம வாக்காளர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக இது 7-12% வாக்காளருள்ள இன்னுமொரு புதிய மாகாணத்துக்குச் சமன்.

பலமுறை பதிவு செய்யப்பட்டவர்கள் பலமுறை வாக்களிக்க வரமாட்டார்களா?

இந்த “மர்ம வாக்காளர்” விவகாரத்துக்கு ஒரு விளக்கம் ஒரே ஆள் இரண்டு தேர்தல் தொகுதிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடியமை. அப்படியான மர்ம வாக்காளர்கள் இரண்டு இடத்திலும் வாக்களிக்க வர மாட்டார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வந்தவர்களின் தொகை 12,264,377 அல்லது 81.5%. இது சந்தேகத்துக்கிடமான அளவிற்குக் கணிசமானது. பதினெட்டரை வயதிற்கு மேற்பட்டவர்களை மட்டும் எடுத்துக்கொண்டால் வாக்குப்பதிவு வீதம் 86%க்கு உயரும். நோய்வாய்ப்பட்டவர்கள், வெளிநாட்டில் வதிபவர்கள், வாக்களிப்பதில் அக்கறையில்லாதவர்கள் எனற பல்வேறு சாத்தியங்களைக் கருத்தில் கொண்டால் இந்த வாக்குப்பதிவு வீதம் நம்பத்தகாத அளவு அதிகம். ஆகவே மர்ம வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கும் வாக்களிக்க வந்தார்கள் என்பது தெளிவு!

அடுத்து மர்ம வாக்காளர்களின் தொகையை மாவட்டரீதியாகப் பார்ப்போம். எல்லா மாவட்டங்களிலும் மேலதிக வாக்காளர்களின் தொகை ஒரேயளவில் இருந்தால் அது பாரிய அளவான மோசடியின் விளைவல்ல என்று முடிவு கொள்ளலாம்.

table_tamil

வாக்களிப்பு உரிமையுள்ளவர்களும் வாக்காளர் பட்டியலும்: மாவட்டரீதியான ஒப்பீடு

மாவட்டரீதியான மொத்த சனத்தொகைத் தரவுகள் 2014ம் ஆண்டு நடுப்பகுதி வரையும் 5-வருட வயதுக் குழுக்கள் பற்றிய தரவுகள் 2012ம் ஆண்டு வரையிலும் உள்ளன. 2012ம் ஆண்டின் அதே சதவீதங்களை 2014ம் ஆண்டின் தரவுகளுக்குப் பிரயோகிப்பதன் மூலம் மாவட்டரீதியான வயதின்படி வாக்களிப்பு உரிமையுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணித்துக் கொண்டோம். மாவட்டரீதியான வாக்காளர் பற்றிய புள்ளிவிவரங்கள் தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். சரித்திரபூர்வமாக இதே தரவுகள் தொகைமதிப்பு புள்ளிவிவரத்திணைக்களத்தின் புள்ளிவிவரச் சுருக்கங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

எங்கே மர்ம வாக்காளர்கள் இருக்கிறார்கள்?

அதிகளவு மேலதிக வாக்காளர்கள் இருப்பது குருநாகல் மாவட்டத்தில் (இடப்பக்க நிலப்படம்). அதைத் தொடர்ந்து கண்டி, காலி, பதுளை, நுவரெலியா, மாத்தறை, கேகாலை, அநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, மற்றும் மாத்தளை. சதவீத ரீதியில் அதிகமான மேலதிக வாக்காளர்களுள்ள மாவட்டங்கள் மன்னாரும் கிளிநொச்சியும் முல்லைத்தீவும். ஆனால் இதன் காரணம் போர் முடிந்ததும் வவுனியாவிலிருந்தும் மற்ற இடங்களிருந்தும் இடம்பெயர்ந்தவர்கள்.  தேர்தல் திணைக்களத்தின் வன்னித் தேர்தல் பிரதேசத்தை (மன்னார், முல்லைத்தீவு, வவுனியா) எடுத்துக்கொண்டால் இந்தச் சதவீதம் குறையும். மொத்த எண்ணிக்கைகளும் குறைவே. இதற்கு அடுத்ததாக சதவீதப்படி அதிகமான மேலதிக வாக்காளார்கள் உள்ள மாவட்டங்கள் மாத்தளையும் அம்பாந்தோட்டையும். அவற்றைத் தொடர்ந்து நுவரெலியா, மொனறாகலை, பதுளை, குருநாகல்.

மாவட்டங்களுக்கிடையான சனத்தொகை வேறுபாடுகள் 20 மடங்கு வரை இருக்கலாம். ஆகவே நாங்கள் மேலதிக வாக்காளர்களின் எண்ணிக்கை, சதவீதம் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு மாவட்டத்தின் சனத்தொகை சிறிதாயுள்ளபோது மேலதிக வாக்காளர்களின் சதவீதம் அதிகமாயிருந்தால் அதன் பாதிப்பு ஒரு ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை கணிசமானதல்ல. அதேபோல ஒரு சனத்தொகை அதிகமான மாவட்டத்தில் மேலதிக வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தேர்தல் மோசடியின் அறிகுறியல்ல. ஆகவே தீவிரமான மோசடி நடந்திருக்கக் கூடிய இடங்கள் முந்திய பந்தியில் தந்துள்ள பல்வேறு பட்டியல்களின் ஏதாவதொரு கலவையாக இருக்கும் வாய்ப்புள்ளது.

 

அடுத்ததாக, மிக முக்கியமாக, வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை வாக்குரிமையுள்ளவர்களின் எண்ணிக்கையின் சதவீதமாகப் பார்ப்போம். இப்படிப் பார்ப்பது வாக்காளர் பட்டியலின் வீக்கங்களால் வரும் புள்ளிவிவரக் குளறுபடிகளைத் தவிர்க்கவும் உதவும். நாங்கள் ஏற்கெனவே பார்த்தபடி  வாக்களிப்பு வீதத்தின் தேசிய சராசரி 86% என்பது சந்தேகத்துக்கிடமானது. மாவட்டரீதியாகப் பார்க்கும் போது இது அம்பாந்தோட்டையிலும் (94%) மாத்தளை, மொனறாகலை மற்றும் பதுளையிலும் (92-93%) இன்னும் அதிகரித்தது. அதே நேரம் கொழும்பில் 77%, வவுனியா, யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 70%.

வாக்காளர் பட்டியலை மட்டும் வைத்துகொண்டு வாக்களித்தவர்களின் சதவீதத்தைக் கணக்கிட்டால் களுத்துறையும் இரத்தினபுரியும் தான் முன்னிற்கின்றன. ஆனால், வயதின்படி வாக்குரிமையுள்ளவர்களின் எண்ணிக்கையின் சதவீதமாக வாக்களித்தவர்களின் தொகையைப் பார்த்தால் இந்த மாவட்டங்கள் முன்னிற்பனவல்ல. இந்த உதாரணத்தின் மூலம் வாக்காளர் பட்டியல் மோசடிகளைப் பற்றி ஆராயும்போது வாக்குரிமையுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்வதின் முக்கியத்துவம் தெளிவாகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மர்ம வாக்களிப்பு ஊவா, சபரகமுவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் அதிகளவில் நடைபெற்றுள்ளது. மற்ற மாவட்டங்களில், உதாரணமாக, கம்பஹா, அம்பாறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில், மர்ம வாக்காளர்களின் அடையாளங்கள் குறைந்த வாக்குப்பதிவுகளாலோ அல்லது வேறு காரணங்களாலோ தெளிவாகத்  தென்படாமல் இருக்கலாம்.

ஆய்வு வழிமுறைகளைச் சுயாதீனமாகச் சரிபார்த்தல்

2012ம் ஆண்டின் மேலதிக வாக்காளர்களைக் கணிக்கத் தேவையான தரவுகளைத் தொகைமதிப்பு புள்ளிவிவரத்திணைக்களம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரச் சுருக்கத்தில் 2012இல் மாவட்டரீதியான வாக்காளர் எண்ணிக்கையும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளன. பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகையோடு ஒப்பிடும்போது 2% மேலதிக வாக்காளர்கள் உள்ளனர். அதிகப்படியான மேலதிக வாக்காளர் இருப்பது குருநாகல், கண்டி, காலி, பதுளை, கேகாலை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியாவில். சதவீதப்படி அதிகமாக இருப்பது மாத்தளையிலும் (9%) அம்பாந்தோட்டையிலும் (8%). அவற்றைத் தொடர்ந்து பதுளை, குருநாகல், காலி, நுவரெலியா (7%).

தொகைமதிப்புப் புள்ளிவிவரத்திணைக்களத்தின் 2012ம் ஆண்டுக்கான 2% மேலதிகம் 2015ம் ஆண்டுக்கான மேலதிகம் 4.3% என்ற எங்களுடைய மதிப்பீட்டோடு இணக்கமானதே. ஏனென்றால் 2010 தேர்தலுக்கும் 2015 தேர்தலுக்கும் இடையில் மர்ம வாக்காளர்களின் தொகை இரண்டு மடங்காகியிருக்கிறது. 2012க்கும் 2014க்கும் இடையில் தேசிய சனத்தொகை 1.7% மட்டுமே அதிகரித்திருந்தாலும் வாக்காளர் பட்டியல் 4.1% அதிகரித்திருக்கிறது.

இந்தத் தருணத்தில், “முந்தைய தேர்தல்களிலும் மர்ம வாக்காளர்கள் இருந்திருகிறார்களா?” என்ற கேள்வி எழுவது இயற்கையே. 1981ம் ஆண்டை எடுத்துக் கொண்டால் தேசிய அளவில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 8,670,319. ஆனால் வாக்காளர் பட்டியலின் அளவு 8,145,015 மட்டுமே. அதாவது 2012இன் 2% மேலதிகம் போல இல்லாமல் 1982 தேர்தலில் வாக்களித்தோரின் தொகை வயதின்படி வாக்குரிமை உள்ளவரின் தொகையைவிட 6% குறைவாகவே இருந்தது. வாக்களித்தோரின் தொகையான 5,768,662 வாக்காளர் பட்டியலின் 70% ஆகவும் வாக்குரிமை உள்ளோரின் தொகையின் 68% ஆகவும் இருந்தது. வாக்காளர் பட்டியலில் மர்ம வாக்காளர் பெருமளவில்இடம்பெறத் தொடங்கியமை 1999 இல் ஆரம்பித்தது. 2010 தேர்தலுக்குப் பிறகு அவர்களின் தொகை கணிசமாக வளர்ந்ததிருக்கிறது.

ஆகவே நாங்கள் உபயோகித்த ஆய்வு வழிமுறையை தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத் தரவுகளாலும் கலாநிதி லக்சிறி பெர்னாண்டோவின் ஆராய்ச்சியாலும் சுயாதீனமாகச்  சரிபார்த்துக் கொள்ளலாம். தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் முழுப்பிழை என்பது மட்டும்தான் “பத்து லட்சத்துக்கு மேலாக மர்ம வாக்காளர்கள் இருக்கிறார்கள்” என்ற எங்கள் ஆய்வின் முடிவு பிழையாக இருப்பதற்கு ஒரேயொரு விளக்கம். இந்த நிலமை இவ்வளவு பாரதூரமாகவும் அதிசயமாகவும் இருப்பதால் நாங்கள் திறந்த மனதோடு எல்லா விதமான விளக்கங்களையும் அலசிப் பார்க்க வேண்டும். எனினும் எங்கள் ஆய்வின் முடிவுகள் இந்த மர்ம வாக்காளர்கள் இருப்பதற்கான காரணங்கள் ஏது என்று ஆயவேண்டிய தேவையை ஆதரிக்கும் அளவிற்குத் தீர்க்கமாக இருக்கின்றன.

மர்ம வாக்காளரால் நன்மை கிடைத்தது யாருக்கு?

மர்ம வாக்காளரின் சதவீத தொகை அதிகமாயுள்ள மாவட்டங்கள் (நடுவிலுள்ள நிலப்படம்) பதவியிலிருந்தவர் (ராஜபக்ச) வெற்றிபெற்ற மாவட்டங்களுடன் (இடப்பக்க நிலப்படம்) ஒத்திருக்கிறது. மேலதிக வாக்காளர் அதிகமாயுள்ள மாவட்டங்களில் (நடுவிலுள்ள நிலப்படத்தில் கடுஞ்சிவப்பு) தேர்தல் முடிவுகள் ராஜபக்சவுக்குச் சாதகமாக இருந்தன (இடப்பக்க நிலப்படத்தில் கடுநீலம்). இந்த இணையுறவுக்கு சில மாவட்டங்களே இதற்கு விதிவிலக்கு, முக்கியமாக நுவரெலியாவும் கம்பஹாவும் பொலநறுவையும். புள்ளிவிவரவியல் முறைகளின்படி பார்த்தால் இந்த இணையுறவு காத்திரமானது எனலாம் (r=0.612, p<0.0015) . அதாவது மர்ம வாக்காளர்களால் நன்மை பெயர்ந்தது ராஜபக்ச அரசுக்கே.  அதிகமான வாக்களித்த பிரதேசங்களில் பதவியிலிருப்பவர் வெற்றி பெறுவது என்ற பாங்கு வெளிப்படையான காரணமேதுமில்லாமல் ஆனால் திரும்பத்திரும்ப நடக்கும் போது அதைத் தேர்தல் மோசடியின் ஒரு குறிக்காட்டியாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுவது வழமையாக உலகின் வேறு இடங்களில் உபயோகிக்கபட்ட ஒரு வழிமுறை (Klimak et al., Proc. Nat. Acad. Sci., 2012).

வடகிழக்கு வாக்காளர்கள் இப்போதுள்ள முன்னேற்றப்பட்ட வீதி வசதிகளை உபயோகித்துக் கொழும்பிலும் வந்து வாக்களித்தார்கள் என்று ராஜபக்ச ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் வடகிழக்கிலும் கொழும்பிலும் வாக்களித்தவர்களின் சதவீதம் குறைவாக இருந்தது என்ற விடயம்  இந்தக் குற்றச்சாட்டுக்கு முரண்பாடானது. ஆனால் அதைப் முற்றுமுழுதாக மறுப்பதற்குப் போதிய ஆதாரமுமல்ல. இந்தப்பிரதேசங்களில் இருந்த கிட்டத்தட்ட 70% வாக்களிப்பு வீதம் 1970களில் தேசியரீதியாக இருந்த வாக்களிப்பு வீதத்துக்கு ஒப்பானது.

வாக்காளர் பட்டியால் மோசடி நோக்கோடு கையாளப் பட்டிருக்கலமா?

பல சிறிய குறைபாடுகளிருந்தாலும் கடந்த ஜனாதிபதி தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட்டது என்று தேர்தல் ஆணையாளர், மதிப்புக்குரிய சர்வதேச கண்காணிப்பாளர்கள், தேர்தலைக் கண்காணித்த CAFFE, CMEV, PAFFREL போன்ற அமைப்புகள் எல்லாம் ஒருமித்த அபிப்பிராயம் கொண்டுள்ளனர். கடந்த தேர்தலில் வாக்காளர்களின் ஆர்வமான ஆதரவை இழந்ததாலேயே ராஜபக்ச தோல்வியுற்றார் என்று ஒரு பரவலான அபிப்பிராயம் நிலவி வந்தது. தேர்தல் மோசடி நடந்திருந்தாலொழிய இந்த அபிப்பிராயம் சரியல்ல ஏனென்றால் அதிகபடியான வாக்களிப்பு இருந்த பிரதேசங்களில் ராஜபக்ச கூடிய வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதை இதற்கு முந்திய ஒரு கட்டுரையில் (கொழும்பு டெலிகிராப், மே 11, 2015) எடுத்துக் காட்டினேன். இதுவரை அலசப்பட்ட விவரங்களால் ராஜபக்ச அரசுக்குச் சாதகமான வகையில் வாக்காளார் பட்டியல் கையாளப் பட்டிருக்கிறது என்பதை  நிர்மாணித்திருகிறோம்.  மற்றப் பிரதேசங்களில் வாக்காளர் பதிவு செய்து கொளவதில் பலவித இடைஞ்சல்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதைப் பற்றியும் சில கதைகள் இருக்கின்றன. வாக்காளர் பட்டியல் மோசடியைத் தவிர வயது குறைந்தவர்களால் வாக்களிப்பு, தபால் வாக்களிப்பு மோசடி, வாக்குத் திணிப்பு போன்ற பல்வேறு விதமான வாக்கு மோசடிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு வாக்குகள் மிகமுக்கியமானவை. ஆகவே வாக்காளர் பட்டியலின் மோசடிக் கையாட்சி மற்றும் பிறவித தேர்தல் மோசடிகள் இடம்பெறவில்லை என நினைப்பது அப்பாவித்தனமானது ஏனென்றால் வாக்குகளை அதிகரிப்பதற்கு இவைதான் சுலபமான வழிகள். வாக்காளர் பதிவு எல்லோருக்கும் தெரியக்கூடிய ஒரு வெளிப்படையான செயல்முறையல்ல, ஆகவே அதில் மோசடிகளைக் கண்டுபிடிப்பது கடினம். எல்லோரும் தேர்தல் தினத்தினன்று என்ன நடக்கின்றது என்பதிலேதான் கவனஞ் செலுத்துகிறார்களே தவிர அதற்கு முன் நடக்கக்கூடிய மோசடிகளைப் பற்றிய ஆய்வு கதையளவோடு மட்டும் நிற்கின்றது. அரச சேவைகள் அரசியலின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன என்பது இப்போ பரவலாக ஏற்றுகொள்ளப்பட்ட விடயம். அரச ஊடகங்கள், போக்குவரத்து சேவைகள், வறுமை ஒழிப்புச் சேவைகள், ஏன் சுற்றுலாத் திணைக்களத்தில் கூட அரசியல்ரீதியான மோசடிகள் நடக்கின்றன என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ தொடர்ந்து வந்த ஒரு கட்டுரையில் (கொழும்பு டெலிகிராப், 21 ஜனவரி 2015) இவ்வாறு எழுதினார்: “எனக்கறிந்த அளவில் நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் தாங்கள் நியமித்த கிராமசேவையாளர் மற்றும் அதிகாரிகளின் மூலமாக வாக்காளர் பட்டியலில் உத்தியோகபூர்வமற்ற மாற்றங்களைச் செய்து வருகிறார்கள்.”

ஒரு அமைச்சரின் மனைவி வேறு பெயரில் புதிய அடையாள அட்டையையும் கடவுச்சீட்டையும் பெற்றுக் கொண்டதைக் காவல்துறை அறியத்தந்தது. இதைக் கையாண்ட குடிபெயர்வு அலுவலர் எந்தவித எதிர்ப்புமில்லாமல் இந்த விண்ணப்பத்தை அங்கீகரித்திருக்கிறார். இப்பேர்ப்பட்ட நிலைமையில் கிராமசேவையாளர்கள் இதைவிடப் பலவீனத்தோடு விட்டுக்கொடுப்பதில் ஆச்சரியமில்லை. பிறப்புச் சான்றிதழே போலி என்றால் ஒரு நேர்மையான கிராமசேவையாளரால் கூட வாக்காளர் பதிவு மோசடியை இனங்கண்டு கொள்ள முடியாது.

சில அரசியல் ஈடுபாடுகொண்ட அதிகாரிகள் தெரிந்துகொண்டே மோசடிக்குத் துணை போயிருக்கலாம். பதவியிலுள்ள அரசியல்வாதிக்கு ஆதரவளிக்கும் வாய்ப்புக் குறைவான வாக்காளர்கள் பதிவுசெய்து கொள்வதைத் தாமதிப்பதோ அல்லது வாக்காளர் பட்டியலிலிருந்து நழுவ விடுவதோ வாக்குகளை அமுக்க ஒரு இலகுவான, முற்றுமுழுக்க சட்டபூர்வமான, வழிகள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை விளக்குதல்

கடந்த ஜனாதிபதி தேர்தல் 470,000 வாக்களர்களில் 3.7% பெரும்பான்மையால் முடிவு செய்யப்பட்டது. பத்து லட்சம் மேலதிக, மர்ம வாக்காளர்கள் பெருமளவில் ராஜபக்சவுக்கு வாக்களிருந்திருந்தால் சிறிசேனவின் பெரும்பான்மை 1,070,000 வரை,  அதாவது 8-9% வரை, உயர்ந்திருக்கலாம். அப்படியானால் நியாயமான வாக்குகளில் சிறிசேனவுக்கு 60 லட்சமும் ராஜபக்சவுக்கு 50 லட்சமும் கிடைத்திருக்கும். வாக்களிப்பு மாவட்டரீதியிலான போக்கைப் பின்பற்றியிருக்கும் என்று எடுத்துக் கொண்டாலும் சிறிசேனவின் பெரும்பான்மை பல லட்சங்களால் கூடியிருக்கும்.

இந்தளவிலான மோசடியை மனத்தில் வைத்துக் கொண்டு மாவட்ட மற்றும் தேர்தல் தொகுதி மட்டிலான முடிவுகள், பெரும்பான்மை வாக்குகள் போன்ற விடயங்களை அலசும்போது வரும் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பெருமளவில் வேறுபடலாம்.

வரும் பாராளுமன்றத் தேர்தலிலான தாக்கம்

எதிர்காலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து மர்ம வாக்காளர் நீக்கப்படலாம். ஆனால் இது புதிய அரசாங்கத்தால் கட்டாயம் நடத்தப்படும் என்று சொல்ல முடியாது. மர்ம வாக்களர்களை உருவாக்கத் துணைபோன அதிகாரிகள் இந்தக் குறைகளை மூடிமறைக்கலாம். அடுத்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் மர்ம வாக்காளர்களின் விளைவு பழைய ராஜபக்ச நிர்வாகத்தைச் சார்ந்தவர்களுக்குச் சாதகமாகவே இருக்கும்.

மர்ம வாக்காளர்களால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் வரக்கூடிய விளைவுகள் இரண்டு விதமானவை. முதலாவதாக: வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேதான் 160 பாராளுமன்ற ஆசனங்களும் மாவட்டங்களிடையே பிரிவு செய்யப்படுவன. இந்த வகையில் யாழ் மாவட்டம் இப்போதிருக்கும் பத்து இடங்களில் நான்கை இழக்கும் வாய்ப்புள்ளது; வன்னி (மன்னார், முல்லைத்தீவு, வவுனியா) ஆறு இடங்களில் ஒன்றை இழக்கலாம். இதைத்தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் ஒதுக்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் குறைவு. இரண்டாவதாக: மர்ம வாக்காளர்களின் பத்து லட்சம் மேலதிக வாக்குகளால் பல நெருக்கமான தேர்தல்களின் முடிவுகள் மாற்றப்படலாம்.

இந்த விளைவுகள் சில மாவட்டங்களில் மிகவும் தீவிரமாக இருப்பன. இவற்றைச் சரியாக அனுமானிக்க இன்னும் கூடிய ஆய்வு தேவை. ஒட்டுமொத்த சதவீதங்களை வைத்துக் கணித்தால் 10-25 ஆசனங்களின் முடிவுகள் மர்ம வாக்காளர்களால் மாற்றப்படலாம். இந்தப் பிரச்னையைச் சரியாக இனங்கண்டு, வாக்காளர் பட்டியலை ஒரு நடுநிலமையான, வெளிப்படையான தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதும், வாக்களிப்பு மோசடிகளை இன்னும் துல்லியமாகக் கண்டறியக் கூடிய முறைகளை நடைமுறைப்படுத்தப் படுவதும் தான் இப்போது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்.

பிறதேசங்களில் வதியும் பிரஜைகளும் வாக்காளர் ஒடுக்கப்படுதலும்

இப்படியான திருத்தங்களுக்குப் பிறகும் பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு முற்றுமுழுக்க நியாயரீதியாக மாறிவிடாது. இதற்குக் காரணம் போரின் பின்விளைவுகளும் மற்றும் வாக்களர் பதிவு எண்ணிக்கைகளின் வீழ்ச்சியும். மேல், வடகீழ் மாகாணங்களிலும் வேறு சில பகுதிகளிலும் வாக்காளர் பதிவு எண்ணிக்கை இருக்கவேண்டிய அளவிலும் திட்டவட்டமாகக் குறைவாகவே காணப்படுகிறது.

அரசியலமைப்பின் கொள்கைகளை உண்மையாகக் கடைப்பிடித்து எல்லாப் பிரசைகளுக்கும் சம வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்றால் வாக்காளர் பதிவு உடன்பாடான முறையில் நடத்தப்பட்டு வெளிநாடுகளில் வதியும் பிரசைகள், போர் காரணமாக அடைக்கலம் புகுந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் பதிவு செய்வதில் இடைஞ்சல்களை எதிர்கொண்டவர்களுக்கான தடைகளை நீக்கி அவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தவேண்டும்.

 

இதை எழுதிய ZL  மொஹம்மட் அவர்களை  zilm (@) mail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளல்லாம். இந்தக்கட்டுரையில் உபயோக்கிப்பட்ட தரவு அட்டவணைகளைப் பெறவிரும்பினால் தொடர்பு கொள்க,.

அசல் இணைப்பைClick Here

பெயர் (கட்டாயம் )

உங்கள் மின்னஞ்சல்(கட்டாயம்),மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது

பொருள்

உங்கள் செய்தி

One thought on “இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் தேர்தல் மோசடியாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கும்.

  1. slelect சொல்லுகின்றார்:

    ஆவி வாக்களர்கள் இருக்கின்றனர்

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

கட்டுமான கீழ் உள்ள வலைதளம்

WEBSITE UNDER CONSTRUCTION

Connect With Us

Visit Us On TwitterVisit Us On Facebook

புதுப்பித்தல் அறிவிப்புகளுக்கு பதிவு செய்க